அரியானாவில் ஐஸ்கிரீம் விற்று வாழும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பி.. இந்தியாவில் இருக்க அனுமதி!
- தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார்.
- பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் எல்லை வழியாக வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் அரியானாவில் ஐஸ்கிரீம் விற்று பிழைப்பு நடத்தும் பாகிஸ்தான் முன்னாள் எம்.பியின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தபயா ராம் என்ற அந்த நபர் தற்போது அரியானாவின் ரத்தன்கார் பகுதியில் தனது குடும்பத்தினர் 34 பேரோடு வசித்து வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தவர் தபயா ராம். அழுத்தம் காரணமாக அவரின் குடும்பம் அங்கேயே தங்கியது.
1988ஆம் ஆண்டு பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் மிகவும் நெருக்கடி மிகுந்ததாகவே இருந்தது. மதமாற்றம் உள்ளிட்ட அழுத்தமும் தபயாவின் குடும்பத்துக்கு இருந்து வந்தது.
ஏமாற்றம் மற்றும் அச்சத்தின் காரணமாக தபாயாவின் குடும்பம் 2000 இல் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர். உறவினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஒரு மாத விசாவில் அரியானா வந்த தபயா ராம் குடும்பம் பின்னர் நிரந்தரமாகவே இங்கு வசிக்கத் தொடங்கினர்.
குடும்பமும் பெரிதாகிவிட்டதால், அதனை கவனித்துக்கொள்ள குல்ஃபி, ஐஸ்கிரீம் விற்கும் பணியில் தபயா ஈடுபட்டுள்ளார். இவரின் 7 வாரிசுகளும் உறவினர்களையே திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது தபயா ராமின் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற தபயா ராம் போராடுகிறார். அவரின் இரு பெண்கள் உள்பட 6 பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் தபயா ராம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. உள்ளூர் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு தபயா ராம் தனது குடும்பத்துடன் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.