கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக பரவிய தகவல் - போலீசார் விளக்கம்
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
- கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசினார்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் வீடு மற்றும் குடும்பத்தினர் ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் வீடு மற்றும் அவரது மகன் தாக்கப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.