ஆளில்லாத வீட்டுக்கு மாதம் ரூ.1 லட்சம் மின் கட்டணம் - புழுங்கிய கங்கனா - கிழித்தெடுத்த மின் வாரியம்
- மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
- இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.
மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.