இந்தியா

தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது இத்தனை கோடியா?

Published On 2024-02-15 19:13 IST   |   Update On 2024-02-15 19:13:00 IST
  • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பு விவரங்களை வெளியிட வேண்டும்.
  • தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது. ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாக இந்தத் திட்டம் கருதப்பட்டது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்துசெய்து இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக்கூறிய நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்தவேண்டும்

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என உத்தரவிட்டனர்

இந்நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவற்றின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழங்கிய தகவல்கள் வருமாறு:

மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் மூலம் மொத்தம் ரூ.16,518.11 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பா.ஜ., ரூ.6,565 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் 2வது இடம் பிடித்து ரூ.1,547 கோடியைப் பெற்றுள்ளது.

3-ம் இடத்தில் இடத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.823 கோடியையும், 4ம் இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.367 கோடியையும், 5ம் இடத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.231 கோடியையும் பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்த நிதியில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ளன. மொத்த தொகையில் பா.ஜ.க. ஏறக்குறைய 60 சதவீதம் பெற்றுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Tags:    

Similar News