தேர்தலுக்கு முன் பீகார் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது - அசோக் கெலாட்
- காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக மகளிர் தொழில்வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், 75 லட்சம் பெண்களின் வாங்கிக்கணக்குக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 26ல் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதை விமர்சித்து செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் பேசுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பெண்களுக்கு, 10,000 ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. ராகுல் கூறிய வாக்கு திருட்டு இது தான். பண பலம் இந்த தேர்தலில் விளையாடி உள்ளது.
இதனால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்கலாம். ஆனால், காங்கிரசின் சித்தாந்தம் நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒன்று" என்று தெரிவித்தார்.