இன்று இரவு 8 மணிக்கு அமித் ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.
காலை 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பி துரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தங்கினார்.
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் நேரில் வாழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
இதையடுத்து, மத்திய மந்திரி அமித்ஷாவை, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தங்குகிறார்.
நாளை 17 -ந்தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை ஏராளமான கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.