இந்தியா

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Published On 2025-03-25 20:56 IST   |   Update On 2025-03-25 20:56:00 IST
  • எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் அமித்ஷாவுடன் சந்தித்துள்ளனர்.
  • கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் சந்திப்பு.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமி அங்கு புதிதாக கட்டப்பட்டு காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர், "பிரத்யேகமான நபரை பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பார்வையிடவே வந்துள்ளேன்" என்றார்.

இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா எடப்பாடி பழனிசாமி என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் அமித்ஷாவுடன் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News