பர்தா அணியாத மனைவியை கொலை செய்த கணவர்.. 2 மகள்களையும் கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூரம்
- காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
- வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பர்தா அணியாத மனைவி மற்றும் 2 மகள்களை நபர் ஒருவர் கொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷாம்லியில் கந்த்லா எல்லைக்குட்பட்ட காரி தௌலத் கிராமத்தை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி தாஹிரா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் 9 அன்று தாஹிரா சொந்த ஊர் சென்றுள்ளார். ஹிஜாப் அணியாமல் அவர் வீட்டை விட்டு சென்றதால் பரூக் ஆத்திரத்தில் இருந்துள்ளார். தாஹிரா வீடு திரும்பியதும் இதுகுறித்து பரூக் வாக்குவாதம் செய்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 10 ஆம் தேதி பரூக், வீட்டில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனைத் தடுக்க முயன்ற 12 வயது மகளையும் சுட்டுக்கொன்றார். பின்னர், தனது 5 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கொலை செய்த பிறகு, மூன்று உடல்களையும் வீட்டின் உள்ளே ஏற்கனவே திட்டமிட்டு தோண்டி வைத்த குழியில் புதைத்துவிட்டு, கடந்த சில நாட்களாக எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தாஹிரா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என்று பரூக்கின் தந்தை நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் விசாரணையின் போது, தனது மனைவி புர்கா அணியாமல் வெளியே சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாகப் பரூக் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிதி நெருக்கடி மற்றும் பணப் பிரச்சனைகளால் தம்பதியிடையே ஏற்கனவே வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே தாஹிராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரூக் மீது கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.