இந்தியா

ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2025-08-10 22:56 IST   |   Update On 2025-08-10 22:56:00 IST
  • பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
  • இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது:

வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொரு முறையே வாக்குப் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News