இந்தியா

வாக்காளர்களுக்கு 4 லட்சம் குக்கர்கள் விநியோகம்: குக்கர் உற்பத்தி நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்

Published On 2024-03-30 08:01 GMT   |   Update On 2024-03-30 08:01 GMT
  • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
  • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News