குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்... மக்களவையில் இன்று விவாதம்!
- பா.ஜ.க. சார்பில் சர்பானந்த சோனோவால் விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார்.
- இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் (ஜன. 28) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார்.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் இன்று (பிப். 2) மக்களவையில் தொடங்குகிறது. இந்த விவாதம் பாராளுமன்றத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்த விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார். அவரை தொடர்ந்து, தேஜஸ்வி சூர்யா இந்த நன்றி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.
இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி பதிலளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.