ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வைப் புகழ்ந்த திக்விஜய் சிங்: இதுதான் காரணம்
- ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
- ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.