இந்தியா

ராகுல் காந்தியின் திடீர் வருகைக்கு டெல்லி பல்கலைக்கழகம் எதிர்ப்பு

Published On 2025-05-23 16:53 IST   |   Update On 2025-05-23 16:53:00 IST
  • எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார்.
  • இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல்காந்தி நேற்று டெல்லி பல்கலைக் கழகத்தின் வடக்கு வளாகத்துக்கு சென்றார்.

அங்கு அவர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தல வர் அலுவலகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக புதிய கல்வி கொள்கை, ஜனநாயக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி இடங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் திடீர் வருகைக்கு டெல்லி பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியின் திடீர் வருகை பல்கலைக்கழக நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது. மாணவர்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருந்தது.

எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார்.

அவர் ஒரு மணி நேரம் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அந்த நேரம் முழுவதும் அந்த பகுதி பாதுகாப்பு பணியாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. துறை செயலாளர் தனது அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. அவரை இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம் இதுபோன்ற செயலை கண்டிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம். இதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News