இந்தியா

மைதானத்தை சிறையாக மாற்றக்கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி அரசு

Published On 2024-02-13 06:07 GMT   |   Update On 2024-02-13 06:08 GMT
  • டெல்லியில் நுழையும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் திட்டம்.
  • அதிகமானோர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் மைதானத்தை சிறையாக மாற்ற கோரிக்கை விடுத்திருந்தது.

விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் மாநில எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். அப்படி மீறும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் டெல்லியில் உள்ள பவனா மைதானத்தை தற்காலிக சிறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக டெல்லி அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விவசாயிகளை கைது செய்வது தவறானது. விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசன உரிமை என டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News