டெல்லி கார் வெடிப்பு உயிரிழப்புகள்: முதல்வர் ரேகா குப்தா, மம்தா பானர்ஜி இரங்கல்
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.
டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார்.