இந்தியா

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்- டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியான தகவல்

Published On 2025-11-13 08:27 IST   |   Update On 2025-11-13 08:27:00 IST
  • டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான்.
  • கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான்.

டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது. வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.

அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது விசாரணையில் தெரியவந்தது. உமர் முகமது ஓர் தீவிரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.

தீவிரவாதி உமர் முகமது ஜம்மு- காஷ்மீர் புல்வாமில் 1980-ம் ஆண்டு பிறந்துள்ளான். பரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தான்.

ஜம்மு-காஷ்மீர் அரியானா போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான டாக்டர் அதில்அகமது ராதர் மற்றும் டாக்டர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய உதவியாளராக இருந்தான். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 2900 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றியதை அறிந்ததும் பரிதாபாத்தில் இருந்து ஒருவர் தப்பி சென்றான். 2 பேர் கைது செய்யப்பட்டதால் உமர் முகமது இந்த குண்டு வெடிப்பை நடத்த தூண்டியதாக கூறப்படுகிறது.

டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான். கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான். கடந்த 10-ந்தேதி வரை கார் அங்கேயேதான் நின்றது. காரை வாங்கி கொண்டு வந்த போது அந்த காரில் ஆண்கள் 3 பேர் இருந்து உள்ளனர். 10-ந்தேதி உமர் அந்த காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தார்.

குண்டு வெடிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு குண்டு வெடிக்கும் வரை காரை விட்டு கீழே இறங்காமல் காத்திருந்துள்ளான். உமர் முகமது அவனது கூட்டாளிகள் 2 பேர் வருவதற்காக அங்கே காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கார் குண்டு வெடிப்பில் உமர் முகமது இறந்தாரா? அல்லது தப்பித்தாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, உமர் முகமது கால் ஸ்டீயரிங் மற்றும் ஆக்ஸிலேட்டருக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 



Tags:    

Similar News