நாடாளுமன்றத்திற்கு நாய்க்குட்டியுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.; ஆதரவாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி!
- நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
"நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.