மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா
- மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை.
- அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது.
பாட்னா:
பீகாரில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில். நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பீகாரின் கட்டிஹார் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை.
ஒருபக்கம் அவர் அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம் நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.
ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு.
மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.
மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.
அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? என தெரிவித்தார்.