ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி - ராணுவ சீருடையில் மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உயிரிழந்தார்.
- கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றவர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜ்வீர் சிங்கின் புகைப்படத்தை அவரது கையில் பிடித்தபடியே நடந்து வந்தார்.
ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றார். கடைசியாக அவர் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமானப் படையில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார்.
ராஜ்வீர் சவுகான் 2011 இல் தீபிகாவை திருமணம் செய்தார். தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். 14 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.