இந்தியா

அமலாக்கத்துறை கைது செய்துள்ள சன்பிரீத் சிங் பா.ஜனதாவுக்கும் வேலைப்பார்த்துள்ளார்: ஆம் ஆத்மி

Published On 2024-04-16 11:50 GMT   |   Update On 2024-04-16 11:50 GMT
  • மதுபான கொள்கை மூலம் பெற்ற பணத்தை கோவா, பஞ்சாப் தேர்தல் பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு.
  • கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மியின் நிதியை நிர்வகித்தவர் சன்பிரீத் சிங் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லைசென்ஸ் வழங்குவதற்கு பதிலாக சுமார் 100 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் இந்த பணம் கோவா, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று அமலாக்கத்துறை சன்பிரீத் சிங் என்பரை கைது செய்துள்ளது. இவர் கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் நிதியை நிர்வகித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சன்பிரீத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சன்பிரீத் சிங் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா கட்சிகளுக்காக வேலை செய்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறுகையில் "அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சன்பிரீத் சிங் கடந்த வருடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். அவர் தானாகவே சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜாமின் பெற்றார். தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சன்பிரீத் வெளியில் இருந்து கொண்டு (freelancer) பல கட்சிகளுக்கு வேலைப்பார்த்துள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு, அதையும் தாண்டி பா.ஜனதாவுக்காகவும் வேலைப் பார்த்துள்ளார். இதை நான் இங்கே சொல்லவிலை. சிபிஐ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

இது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை களங்கப்படுத்தும் முயற்சியாகும். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சிக்கு எதிராக உருவாக்கும் குற்றச்சாட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை. பா.ஜனதா அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை இழிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்றார்.

Tags:    

Similar News