இந்தியா

பெயர் மாற்ற மறுக்கும் கேரளா - பணம் தர மறுக்கும் டெல்லி

Published On 2024-01-11 10:52 GMT   |   Update On 2024-01-11 10:52 GMT
  • "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" செலவினங்களில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு
  • டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.7 கோடி நிலுவையில் உள்ளதாக வீணா தெரிவித்தார்

நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மத்திய அரசின் நிதியாலும் மாநில அரசின் நிதியாலும் கூட்டாக இயங்கி வருபவை.

கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என செயல்படும் இம்மையங்களின் செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்த மருத்துவ மையங்களை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசாங்கம் வற்புறுத்துவதாகவும், அதனை கேரள அரசு மறுப்பதால், தர வேண்டிய நிதியை தர மறுப்பதாகவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

முதலில் நிதியை நிறுத்தி வைத்து தர மறுத்தனர். பிறகு மத்திய அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக இம்மையங்களில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றனர்.

ஆனால், தற்போது நிதியை கேட்டால், பெயரை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என மாற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர்.

நிதி இல்லாததால் அனைத்து சுகாதார பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் கிடைப்பது கடினமாகிறது.

டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ஆன செலவு தொகை ரூ.7 கோடி மத்திய அரசால் இன்னமும் வழங்கப்படவில்லை.

மேலும், இத்திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் இன்னமும் ஊதியம் வழங்க முடியவில்லை.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தேசிய சுகாதார இயக்கம், "பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வீணா தெரிவித்தார்.

கேரள மக்களின் கலாச்சாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்கு புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை.

Tags:    

Similar News