VIDEO: சாகசத்துக்கு ஆசைப்பட்டு நடுக்கடலில் சொகுசு காருடன் சிக்கிய வாலிபர்
- டூமாஸ் கடற்கரையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அளிப்பதாகக் கூறினர்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தள பயன்பாடு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் வீடியோக்கள் அதிக லைக்குகள், ஷேர்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக விதவிதமாக யோசித்து பதிவிடுகின்றனர். அப்படி பதிவிட அபாயத்தை உணராமல் எடுக்கப்படும் வீடியோக்களால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில், சாகச நிகழ்வை பதிவு செய்வதற்காக கடற்கரையில் சொகுசு காரை கொண்டு சென்றபோது அது கடலில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம் சூரத்தில் டூமாஸ் கடற்கரையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி டூமாஸ் கடற்கரையில் ஸ்டண்ட் டிரைவ் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சொகுசு காரான மெர்சிடிஸ் சி220 காருடன் சென்றுள்ளார். அப்போது அவரது நண்பரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு டிரைவ் செய்து கொண்டிருந்த போது கார் கடலில் சிக்கிக்கொண்டது.
இதனால் செய்வதறியாது தவித்தவர்கள் கிரேன் வாகனத்தை வரவழைத்து காரை கடலில் இருந்து மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், காரை ஓட்டிய 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் காரின் உரிமையாளரையும் கைது செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அளிப்பதாகக் கூறினர்.