பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
- ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி எண்ணற்றோர் உயிரிழந்தனர். இதனால் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து வயநாடு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் நான்தேட் பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்த்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.