இந்தியா

தாலிக்கட்டும் நேரத்தில் காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

Published On 2025-05-24 08:02 IST   |   Update On 2025-05-24 08:02:00 IST
  • முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
  • மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹாசன்:

தாலிக்கட்டும் நேரத்தில் காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் திருமணத்தை மணமகள் நிறுத்திவிட்டார். இதனால் மணமகனான அரசு பள்ளி ஆசிரியர், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு பெற்றோர் ஹாசன் அருகே பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முதுகலைப்பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்திருந்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை நடத்த திட்டமிட்டு இருந்தது.

இதனால் நேற்று முன்தினம் இரவே மணமகள், மணமகன் வீட்டார் ஹாசனில் உள்ள ஆதிசுஞ்சனகிரி திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இல்லற வாழ்வில் இணையப்போகும் சந்தோஷத்தில் மணமகன் மகிழ்ச்சியில் திளைத்தப்படி இருந்தார். ஆனால் மணமகளோ அமைதியாக இருந்துள்ளார்.

நேற்று காலை முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். முதலில் மணமகன் திருமண மேடையில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மணமகள் பட்டுப்புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதையடுத்து புரோகிதர் மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க மணமகன் தனது கைகளில் தாலியை எடுத்து, மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயன்றார். இதற்கிடையே முகூர்த்த நேரத்திற்கு சற்று முன் மணமகளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

அந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசி முடித்தார். உடனே மணமகன் தாலிக்கட்ட நெருங்கியபோது, திடீரென்று மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி அணுகுண்டு வார்த்தையை வீசினார். இதனால் திருமண மண்டபம் களேபரமானது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், மணமகளிடம் என்னை திருமணம் செய்ய ஏன் மறுக்கிறாய்? என கேள்வி கேட்டார். அதற்கு அவர், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். ஆனால் அவரை எனது வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.

எனது காதலன் தான் தற்போது செல்போனில் பேசி திருமணத்தை நிறுத்திவிட்டு வா. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். நான் காதலனை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

இதனால் மணமகன் மேற்கொண்டு பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றார். இதை கவனித்த மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். உடனே மணமேடையில் இருந்து இறங்கி ஓடிய மணமகள், திருமண மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். இதன் காரணமாக மணமகனும் இனி நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் மணமகள் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் காதலனை கரம்பிடிக்க போகிறேன். இந்த திருமணத்தை நிறுத்திவிடும்படி கூறினார். இதனால் அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இருப்பினும் மணமகள் திட்டவட்டமாக திருமணம் செய்ய சம்மதிக்காததால், அவரது விருப்பப்படி விடும்படி போலீசார் கூறினர். இந்த முடிவால் மணமகன் வீட்டார் ஏமாற்றம் அடைந்தனர். திருமணத்திற்கு செய்த செலவு தொகையை பெற்றுத்தர அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் திரைப்படங்களில் தான் தாலிகட்டும் நேரத்தில் மணமகளோ அல்லது மணமகனோ திருமணத்தை நிறுத்தும் பரபரப்பு காட்சிகள் வரும். ஆனால் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஹாசனில் காதலன் செல்போனில் அழைத்து பேசியதை தொடர்ந்து திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது.

Tags:    

Similar News