பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை எரித்து விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- மணிப்பூரில் ஒரு மாதத்துக்கு மேலாக கலவரம் நீண்டு வருகிறது.
- இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒரு மாதத்துக்கு மேலாக கலவரம் நீண்டு வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.
இந்த கலவரம் தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை 40 நாட்களுக்கும் மேலாக எரித்து 100-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. பிரதமர் இந்தியாவை தோல்வியுறச் செய்து முற்றிலும் அமைதியாக இருக்கிறார்' என குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூரின் ஒவ்வொரு இதயத்திலும் இந்த வெறுப்பின் சந்தையை அடைத்து விட்டு, அன்பின் கடையை திறப்போம் என அவர் அழைப்பு விடுத்து உள்ளார். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அனைத்துக்கட்சிக்குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்குமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.