பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை இன்னும் 2 வாரத்தில் வெளியிட திட்டம்
- பாராளுமன்ற மொத்த தொகுதிகளான 543 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா ஆய்வு செய்து முடித்து இருக்கிறது.
- அடுத்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் வேட்பாளர்களை முன்னதாக அறிவிக்க பாரதிய ஜனதா தீவிரம் காட்டி உள்ளது.
பாராளுமன்ற மொத்த தொகுதிகளான 543 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா ஆய்வு செய்து முடித்து இருக்கிறது. இதில் 160 தொகுதிகளில் இதுவரை பாரதிய ஜனதா வெற்றி பெற்றது இல்லை என்பது தெரிய வந்தது. இந்த 160 தொகுதிகளில் சில தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு 2-வது இடம் கூட கிடைக்கவில்லை.
எனவே இந்த 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் பட்டியலை முன்னதாக வெளியிடவும் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் வேட்பாளர்களை முன்னதாக அறிவித்ததால் வெற்றி கிடைத்தது.
அதே பாணியை பாராளுமன்ற தேர்தலிலும் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆய்வு செய்வார்கள். அவர்கள் ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த மாத இறுதியில் பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு 2 வாரங்கள் இருப்பதால் பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தலைவர்களின் பிரசார பயண திட்ட விவரங்களும் அறிவிக்கப்படும்.