துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பா.ஜ.க. பாராளுமன்ற வாரிய கூட்டம் நாளை மறுதினம் கூடுகிறது
- துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடக்கிறது.
- இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ம் தேதி வெளியானது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ம் தேதி வெளியானது.
துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. பாராளுமன்ற வாரிய கூட்டம் நாளை மறுதினம் கூடுகிறது.