இந்தியா

காங்கிரஸ் ஆதரவுடன்தான் சனாதன தர்மத்தை தி.மு.க. எதிர்க்கிறது: பா.ஜனதா குற்றச்சாட்டு

Published On 2023-09-14 03:45 GMT   |   Update On 2023-09-14 03:45 GMT
  • பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு “கதையை” உருவாக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயற்சிக்கின்றன.
  • தி.மு.க. அரசின் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்.

புதுடெல்லி:

சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள பா.ஜனதா, இது தொடர்பாக காங்கிரசையும் கடுமையாக சாடி வருகிறது.

அந்தவகையில் காங்கிரஸ் ஆதரவுடன்தான் தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருவதாக பா.ஜனதா குற்றம்சாட்டி இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் நாராயண திருப்பதி ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடி அரசின் பணிகளுக்கான அங்கீகாரம் அதிகரித்து வருவதை கண்டு, பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு "கதையை" உருவாக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயற்சிக்கின்றன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து மக்களை திசை திருப்பவும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் காங்கிரஸ் ஆதரவுடன் சனாதன தர்மத்தை தி.மு.க. எதிர்க்கிறது.

தி.மு.க. அரசின் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். இது தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. பதற்றத்தில் உள்ளது. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறது. பா.ஜனதா, அனைத்து மதங்களுக்கான கட்சி. நாங்கள் மதவாதிகள் அல்ல, அவர்கள்தான் மதவாதிகள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே சரத்பவார் வீட்டில் நேற்று நடந்த இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை, 'இந்து மத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு' என பா.ஜனதா சாடியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, 'இந்தியா கூட்டணி உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது வெளிப்படையாக தெரிகிறது. இந்து மதத்தை எப்படி ஒழிக்கலாம் என அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள். அதனால்தான் கோத்ரா போன்ற சம்பவம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்' என கூறினார்.

சோனியா காந்தியின் கிறிஸ்தவ பெயரை சுட்டிக்காட்டிய பத்ரா, இந்து மதத்துக்கு எதிரான சதியின் பின்னணியில் அவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News