கர்நாடகத்தில் 'பைக் டாக்சி'க்கு தடை - அத்துமீறி இயக்கிய 103 வாகனங்கள் பறிமுதல்
- கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது
- பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.
பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பைக் டாக்சிகளால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் வெகுவாக குறைந்தது. ஒருவர் மட்டும் பயணம் மேற்கொள்பவா்கள் பைக் டாக்சியை அதிகம் நாடினர்.
இதற்கிடையே பைக் டாக்சி ஓட்டுனர்கள், பெண் பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரித்தன.
அத்துடன் பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
இருப்பினும் கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் பயணம் செய்த பெண் பயணிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல், அந்த டாக்சி சேவையை தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கர்நாடக அரசு கடந்த ஆண்டு (2024) பைக் டாக்சிக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றது.
இதையடுத்து கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரின. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் ஜூன் 16-ந் தேதி (நேற்று) முதல் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அதாவது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மென்போருள் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்), கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை ஆகியவை பைக் டாக்சியை அனுமதிப்பது குறித்து விரைவாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு, பைக் டாக்சியை அனுமதிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தெரிகிறது.
பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பெங்களூருவில் தடையை மீறி இயக்கப்படும் பைக் டாக்சிகளை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, யஷ்வந்தபுரம் மற்றும் ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது பகுதிகளில் தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்
அப்போது தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். யஷ்வந்தபுரம், ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்தார்கள்.மேலும் அந்த வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பெங்களூரு மாநகர் முழுவதும் அத்துமீறி இயங்கிய 103 பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.