பீகார் தேர்தலில் கண்டு கொள்ளவில்லை..!- இந்தியா கூட்டணியில் இருந்து ஜே.எம்.எம். கட்சி விலக முடிவு
- ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்.
- பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது.
இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகளை கொண்ட இக்கூட்டணியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பீகார் தேர்தலில் ஜே.எம்.எம். கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, நவம்பர் 14-ந் தேதி வெளியாகும் பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஜார்க்கண்ட் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஜே.எம்.எம். விலகும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில அமைச்சரும் ஜே.எம்.எம். மூத்த தலைவருமான சுதிப்யகுமார் கூறுகையில், "ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஆர்.ஜே.டி. காங்கிரசுக்கு நாங்கள் இடமளித்துள்ளோம். பீகார் தேர்தலில் இருந்து நாங்கள் விலக இந்த கட்சிகளே காரணம். இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்" என்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் விலக்கப்பட்டால் பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது. ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.