சோதனை மேல் சோதனை- பீகாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ முடிவு
- பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான்.
- ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த ஒற்றை இலக்க வெற்றி அமைந்தது.
இத்தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணிக்கே இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
தொண்டர்கள் மட்டுமின்றி பீகாரில் வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மனநிலையும் தற்போது சற்று மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் காங்கிரசில் பயணித்தால் தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.
இதனால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாமா? என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஐக்கிய ஜனதாதள முக்கிய தலைவரிடம் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்களும் ஒரு வேளை கட்சி தாவி விட்டால் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே என கட்சி மேலிடம் கருதுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது.