வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற பெண் கைது- வீடியோ வெளியாகி பரபரப்பு
- குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
- வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
பெங்களூரு பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஷி பூஜாரி. இவர், கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். ராஷி பூஜாரி தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஜீகுகூவா என்ற இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார்.
அதாவது அந்த நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை புஷ்பலதா செய்து வந்தார். அதன்படி, கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி ராஷி பூஜாரியின் 2 நாய்களையும், புஷ்பலதா நடைபயிற்சிக்கு தனித்தனி கயிறுகளில் கட்டி அழைத்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து புஷ்பலதா வீட்டுக்கு சென்றார்.
அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு நாய் இறந்து விட்டதாக ராஷி பூஜாரியிடம் புஷ்பலதா கூறினார். தான் ஆசையாக வளர்த்த நாய் செத்து விட்டதால் ராஷி பூஜாரி மிகுந்த வேதனை அடைந்து கண்ணீர்விட்டு அழுதார். இருப்பினும், புஷ்பலதா மீது சந்தேகம் அடைந்த அவர், காவலாளியிடம் தனது நாய் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பார்த்தீர்களா? என்று ராஷி பூஜாரி விசாரித்தார். அப்போது நாய் எதுவும் கீழே விழவில்லை என்று காவலாளி தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த ராஷி பூஜாரி, குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாயை லிப்டில் வைத்து புஷ்பலதா கையில் பிடித்து தூக்கி கீழே ஓங்கி அடித்தார். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்து போய்விட்டது. இதையடுத்து செத்துப்போன நாயை கயிற்றுடன் தரதரவென இழுத்து செல்வதும், மற்றொரு நாயை அவர் அழைத்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதை பார்த்து ராஷி பூஜாரி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வேலைக்கார பெண் தனது நாயை கொடூரமாக அடித்துக் கொன்று விட்டதாக கூறி, அந்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் புஷ்பலதா மீது பாகலூர் போலீஸ் நிலையத்தில் ராசி பூஜாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதாவை அதிரடியாக கைது செய்தனர். கைதான புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாய் இல்லாத ஜீவனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற புஷ்பலதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.