திரிபுரா அரசுக்கு ரூ.200 கோடி மின் கட்டண பாக்கி வைத்திருக்கும் வங்காளதேசம்
- கடந்த 2016-ம் ஆண்டு முதல் மின் வினியோகம் நடந்து வருகிறது.
- நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
வங்காளதேசத்துக்கு நாள்தோறும் 60 முதல் 70 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை திரிபுரா மாநில மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வினியோகம் நடந்து வருகிறது.
இந்த மின்சாரத்துக்காக வங்காளதேச அரசு சுமார் ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து உள்ளதாக முதல்-மந்திரி மாணிக் சகா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்காளதேசம் ரூ.200 கோடி வரை மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது நாள்தோறும் அதிகரித்தும் வருகிறது. இதை விரைவில் வழங்கி மின் வினியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.
அதிகமான கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் வங்காளதேசத்துக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுமா? என்று கேட்டபோது, அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
திரிபுரா மின் உற்பத்தி நிலையத்துக்கான பல தளவாடங்கள் வங்காளதேசம் அல்லது சிட்டகாங் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுவதாகவும், எனவே அதற்கான நன்றிக்கடனாகவும் மின் வினியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் கட்டண நிலுவையை வழங்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.