இந்தியா

சனாதனத்தை அவமதித்தால்... உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல்

Published On 2025-10-06 13:26 IST   |   Update On 2025-10-07 12:02:00 IST
  • சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.
  • இத்தகைய விஷயங்கள் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது" என்று நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சமயத்தில் 'சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.

இதனையடுத்து காலணி வீசிய வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News