இந்தியா

டெல்லியில் தொடரும் மோதல்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதவி ஏற்பு விழா நடத்த வலியுறுத்திய ஆளுநர்

Published On 2023-07-04 07:05 IST   |   Update On 2023-07-04 07:05:00 IST
  • அதிகாரிகளை நியமிப்பதில் ஆளுநர்- முதல்வர் இடையே மோதல்
  • உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கிய நிலையில் மத்திய அரசு அவரச சட்டம்

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம் என மத்திய அரசு கூறுகிறது.

அதிகாரிகள் உள்பட பல விசயங்களில் ஆளுநர் தலையிடுவதால் இதை எதிர்த்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் அதிகாரிகளை நியமனம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது.

டெல்லி அரசின் அதிகாரத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் அதை நிறைவேற்ற இருக்கிறது.

இதற்கிடையே, டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா டெல்லி மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் இயக்குனராக ஓய்வு பெற்ற நீதிபதி குமாரை நியமித்தார்.

கடநத 21-ந்தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் குமார் அந்த பதவியில் பொறுப்பேற்கவில்லை. நேற்று பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் மின்சாரத்துறை மந்திரி அதிஷி அலுவலகத்திற்கு வரவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் குமார் பதவி ஏற்க முடியாமல் போனது.

இந்த நிலையில், இன்று குமார் பதவி ஏற்கவேண்டும். அதிஷி உடல்நிலை சரியில்லை என்றால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் ஜனாதிபதி கடந்த 21-ந்தேதி குமாரை நியமித்து ஆணை பிறப்பித்த போதிலும், டிஜிட்டல் உலகத்தில் இன்னும் அதை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.

தனது முன்னிலையில் பதவி பொறுப்பை ஏற்றுக்கொள்ள குமாருக்கு அதிஷி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நேற்று பதவி ஏற்க இருக்கும் நிலையில் அதிஷி அலுவலகம் வரவில்லை.

Tags:    

Similar News