இந்தியா

'விஷப்பாம்பு' விமர்சனம்: கார்கேவின் கருத்து காங்கிரசின் கலாசாரத்தை காட்டுகிறது- அஸ்வினி வைஷ்ணவ்

Published On 2023-04-29 01:52 GMT   |   Update On 2023-04-29 01:52 GMT
  • பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல.
  • பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

புதுடெல்லி :

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று காட்டமாக விமர்சித்தார். அக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கார்கே வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு ரெயில்வே மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் பற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தையும், மனப்பான்மையையும் காட்டுகிறது. தனிப்பட்ட விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கைவிடவில்லை என்று தெரிகிறது.

முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஒரு தடவை பிரதமர் மோடியை 'பிறர் வாழ்க்கையுடன் விளையாடுபவர்' என்று கூறினார்.

தார்மீக அதிகாரம் என்று வரும்போது, பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் சரியான திசையில் நாட்டை அழைத்துச் செல்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.

தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தான் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான காரியத்தை அவர் செய்கிறார். தனது விருப்பத்தை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News