பீகார் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற அசாதுதீன் ஒவைசி கட்சி
- 29 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டது.
- சீமாஞ்சல் பிராந்தியத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
அதேவேளையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. சீமாஞ்சல் பிராந்தியத்தல் மட்டும் 24 இடங்களில் போட்டியிட்டது.
இதில் அக்தருல் இமான் அமோர் தொகுதியில் 38,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 1,00,836 வாக்குகள் பெற்றார்.
கொச்சதாமன், பைசி, ஜாகிகாத், பஹாதுர்கஞ்ச் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சியிடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டது.
சீமாஞ்சலில் வளர்ச்சியை கொண்டு வருவதும், குழந்தைகள் இறப்பை குறைப்பதும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதிலும் கவனம் செலுத்துவோம் என ஒவைசி தெரிவித்துள்ளார்.