இந்தியா

சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் சாப்பிடுவதற்கு ஏற்றது- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2023-09-01 05:28 GMT   |   Update On 2023-09-01 07:13 GMT
  • அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
  • 200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அரவணை பாயசம், அப்பம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அரிசி, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் அரவணை பாயாசத்தை சபரிமலை வரக்கூடிய அய்யப்ப பக்தர்கள் விரும்பி வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் அரவணை பாயாசத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த ஏலக்காயின் தடயங்கள் இருப்பது இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அரவணை பாயாசம் விற்பனை செய்வதை நிறுத்த திருவிதாங்கோடு தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரவணை பாயசத்தின் மாதிரிகளை சோதனை செய்ய திருவிதாங்கோடு தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.

200 டிகிரி வெப்ப நிலையில் அரவணை தயார் செய்யப்படுவதால், அதில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்க வாய்ப்பில்லை என்று தேவசம்போர்டு வாதிட்டது. பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து சரிபார்க்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் சபரிமலையில் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்ட மீதமிருந்த அரவணை பாயாசத்தின் மாதிரிகளை எடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்தது. 8 வெவ்வேறு இடங்களில் இருந்து 16 மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டன.

அதில் அரவணை பாயாசத்தின் மாதிரிகள் உண்ணக்கூடியதாக இருப்பதாவும், திருப்திகரமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய இணை இயக்குனர் பால சுப்பிரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.

Tags:    

Similar News