பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர்
- அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
- ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார்.
பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கொரிய நாட்டு பெண்ணிடம் ஊழியர் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.
இமிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு அவர் டெர்மினல் நோக்கிச் சென்றபோது ஏர் இந்தியா நிறுவனத்தின் தரைதள ஊழியராக பணிபுரியும் 25 வயது முகமது அபான் என்பவர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பயணச்சீட்டைப் பரிசோதித்த ஊழியர், அவரது லக்கேஜில் பிரச்சனை இருப்பதாகவும், அதிலிருந்து பீப் சத்தம் வருவதாகவும் பொய் கூறியுள்ளார்.
மீண்டும் ஸ்கிரீனிங் கவுண்டருக்குச் சென்றால் விமானத்தைத் தவறவிட நேரிடும் என்றும், தான் தனியாகச் சோதனை செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஆண்கள் கழிப்பறை அருகே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அந்தப் பெண் எதிர்த்தபோது அவரைக் கட்டிப்பிடித்து தேங்க் யூ என்று கூறிவிட்டு ஊழியர் அங்கிருந்து நழுவி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளைப் ஆராய்ந்ததில் அந்த ஊழியரின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் முகமது அபானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.