இந்தியா

பொது இடங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது அரசுகளின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2026-01-22 13:46 IST   |   Update On 2026-01-22 13:46:00 IST
  • தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது.
  • கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது.

புதுடெல்லி:

பொதுக்கூட்டம், பேரணியின்போது கூட்ட நெரிசலால் உயிரிழப்பை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தும்பலம் கோட் வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தும்பலம் கோட் வெங்கடேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரியதர்ஷினி, 'கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற கூட்டத்துக்கு பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.

தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது. இது உயிர் சார்ந்த விஷயம் என்பதால் இதற்கு ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும்' என்று கோரினார்.

அப்போது நீதிபதிகள், 'ஒரு உதாரணத்துக்காக, சென்னையில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் டெல்லியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கிறோம் என வைத்துக் கொள்வோம்.

ஆனால் அங்கு 50 ஆயிரம் மக்கள் வருகை புரிந்திருந்தார்கள் என்றால் அப்போது என்ன செய்வது? எனவே இந்த விவகாரத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

இதற்கு அங்கு இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகங்கள் தான் உரிய முடிவை எடுக்க முடியும். கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது. இது தொடர்பாக உரிய அமைப்பிடம் தான் முறையிட முடியும். ஒரு வேளை அரசியல் கட்சி கூட்டமாக இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அணுகலாமே' என்றனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுத்திருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்து ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது ஒரு பொதுவான உத்தரவாக நாடு முழுவதும் அமல்படுத்த முடியும். அதற்காக நீதிமன்றத்தின் தலையீடு அவசியம்' என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பை தடுப்பதற்காக ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும் என கோரி மனுதாரர் இந்த கோர்ட்டை நாடி இருக்கிறார். இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும்.

அதற்காக பொது இடங்களில் நிகழ்நேர கண்காணிப்பு, இடர் தணிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

பொது நிகழ்வுகளின் போது பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். அந்த வகையில் மனுதாரர் எழுப்பி உள்ள கோரிக்கைகளை வேறொரு மனுவாக தயாரித்து, உரிய அமைப்பிடம் வழங்க உத்தரவிடுகிறோம். அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைப்பானது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News