எர்ணாகுளம் வெடிவிபத்து - பினராயி விஜயனுடன் அமித்ஷா பேச்சு
- எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
- இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வெடி விபத்து எதிரொலியாக, கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கேரள வெடி விபத்து தொடர்பாக மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்லும்படி அமித்ஷா உத்தரவிட்டார்.
மேலும், வெடி விபத்து குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டுமென என்.ஐ.ஏ.க்கு உத்தரவிட்டார்.