இந்தியா

அகமதாபாத் விமான விபத்து- உதவி மையங்களை அமைத்த ஏர் இந்தியா

Published On 2025-06-13 08:37 IST   |   Update On 2025-06-13 08:37:00 IST
  • கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
  • கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.

விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டதால் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அகமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அகமதாபாத்திற்கு பயணிக்கு உதவும்.

இந்தியாவிற்குள் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: 1800 5691 444; மற்றும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: +91 8062779200.

மேலும் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com ஆகியவற்றில் உடனடியாக தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளது. 



Tags:    

Similar News