சினிமா செய்திகள்
null

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை: காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பில்லை - சிபிஐ இறுதி அறிக்கை!

Published On 2025-10-24 13:59 IST   |   Update On 2025-10-24 13:59:00 IST
  • அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை
  • சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.

2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார்.

சுசாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுஷாந்தின் தந்தை 2021 இல் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.

அதாவது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.

அறிக்கைப்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை.

மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது.  சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.

சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் மருத்துவ ஆவணங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினார் என்பது வாய்வழி செய்தி மட்டுமே என்பதால் அது தற்கொலைக்கு நேரடித் தூண்டுதலோ அல்லது சட்டவிரோதக் கட்டுப்பாடோ இல்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News