இந்தியா

பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

திவ்ய தரிசன பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க நடவடிக்கை

Published On 2023-07-18 07:36 IST   |   Update On 2023-07-18 07:36:00 IST
  • சேவா சதர்னில் பிரசாதம் வழங்க ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆர்ஜித சேவைகள், உற்சவள் சேவைகள் ஒரே நாளில் ஆன்லைனில் வெளியாகிறது.

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் பங்ேகற்றனர். பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அதற்கு அதிகாரி அளித்த பதில்களும் வருமாறு:-

பிரவீன்குமார், மராட்டியம்: அங்கப்பிரதட்சண டோக்கன்களை நேரில் வழங்க வேண்டும்.

அதிகாரி: பெரும்பாலான பக்தர்கள் வசதிக்காக ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன்களை வழங்குகிறோம்.

சங்கர் கவுடு, ஐதராபாத்: ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படுகின்றன. இது, பெண்களுக்கு சிரமம். எனவே ஒரு மாதத்துக்கு முன்பே வெளியிட முடியுமா?

அதிகாரி: பல பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 மாதங்களுக்கு முன்பு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை வெளியிடுகிறோம். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு கூடுதலாக 4 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

துர்காபிரசாத், அனகாபள்ளி: லக்கி டிப்பில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

அதிகாரி: லக்கி டிப்பில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குறைவு, சாமியை வேண்டி கொள்ளுங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

ஹரி, மஞ்சரியாலா: வயதானவர்களுக்கு அறைகள் தரை தளத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதிகாரி: இதுகுறித்து வரவேற்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்துவோம்.

மனோகர், ஜகித்யாலா: காணிக்கை தலைமுடி இறக்கும் கல்யாணக் கட்டா பகுதியில் சவரத் தொழிலாளிகள் பக்தர்களிடம் பணம் கேட்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

அதிகாரி: பக்தர்கள், சவரத் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் பிரச்சினையே இருக்காது. சவரத் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் கேட்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சவரத் தொழிலாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனை, அறிவுரை வழங்கப்படுகிறது. கர்னூல், ரதிதேவி: சேவா சதர்னில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுமா?

அதிகாரி: பக்தர்களுக்கு வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் அன்னப்பிரசாதம் வழங்குகிறோம். சேவா சதர்னில் பிரசாதம் வழங்க ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவிக்குமார், பெங்களூரு, சுஹாசினி, நந்தியாலா: தங்க வாசலில் (பங்காரு வக்கிலி) திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை இழுத்துத் தள்ளுகிறார்கள்?

அதிகாரி: பக்தர்கள் திருப்திகரமாக தரிசனம் செய்யும் வகையில் மகா துவாரம் முதல் கருவறை வரை ஒற்றை வரிசை முறையை அமல்படுத்தி உள்ளோம்.

ரெட்டி, ராயச்சோட்டி: ரெயில் நிலையம், விஷ்ணு நிவாசம் பகுதிகளில் பிச்சைக்காரர்கள், அன்னியர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விஷ்ணு நிவாசத்தில் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் இடம் குறித்த வழிகாட்டி பலகை இல்லை?

அதிகாரி: ெரயில் நிலையம், விஷ்ணு நிவாசம் பகுதிகளில் பிச்சைக்காரர்கள், அன்னியர்கள் நடமாட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்போம். விஷ்ணு நிவாசம் பகுதி டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் இடம் குறித்து வழிகாட்டி பலகை வைக்கப்படும்.

மணிகண்டன், பலமநேர்: லட்டு கவுண்ட்டர்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றால் மட்டுமே லட்டு வழங்கப்படுகின்றன. இல்லையெனில் கொடுக்கப்படாதா?

அதிகாரி: புரோக்கர்களை தடுத்து நிறுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளோம். பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

முனிலட்சுமி, நெல்லூர்: ஆர்ஜித சேவைகள், உற்சவள் சேவைகள் ஒரே நாளில் ஆன்லைனில் வெளியாகிறது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். வெவ்வேறு நாட்களில் வெளியிடுங்கள்.

அதிகாரி: பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

ஸ்ரீராம், விசாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை ஒரே நேரத்தில் சாமி தரிசனத்துக்கு அனுப்பாமல் தனித்தனியாக அனுப்பலாமா?

அதிகாரி: பரிசீலனை செய்யப்படும்.

அனுமந்தராவ், குண்டூர்: திருமலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்தோம். முன் பண தொகையைத் திரும்பப் பெறவில்லை?

அதிகாரி: நாங்கள் உங்களை அழைத்து, பணத்தைத் திரும்பப் பெறும் விவரங்களை பற்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.

ஈஸ்வர்பிரசாத், ஐராலா: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை நேரத்தில் உணவு சாப்பிட சென்றால், அங்குள்ள கடைகளில் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.

அதிகாரி: அதிக விலை வசூலிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்போம். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையின் தொடக்கத்தில் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

Tags:    

Similar News