இந்தியா

நடப்பு ஆண்டில் 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்

Published On 2025-12-28 05:06 IST   |   Update On 2025-12-28 05:06:00 IST
  • விசா விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
  • சவுதி அரேபியாவிலிருந்து கடந்த ஓராண்டில் 11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

புதுடெல்லி:

வெளிநாடுகளில் விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்தியர்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

சவுதி அரேபியா அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

மியான்மரில் இருந்து 1,591 பேரும், மலேசியாவில் இருந்து 1,485 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1,469 பேரும், பக்ரைன் நாட்டிலிருந்து 764 பேரும், தாய்லாந்தில் இருந்து 481 பேரும், கம்போடியாவில் இருந்து 305 பேரும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News