தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் உயர்வு: டெல்லியில் மீண்டும் கல்வி மாஃபியா- பாஜகவை விமர்சித்த ஆம் ஆத்மி
- பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை.
- பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.
டெல்லியில் பாஜக அரசு, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், டெல்லி கல்வி முறை "கல்வி மாஃபியா"க்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை. நீண்ட நேரம் மின்சார தடை எற்பட்டு வருகிறது. தற்போது, கல்விக் கட்டணத்தை உயர்த்தி தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து கொள்கை அடிக்கின்றன.
பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்தவில்லை என்றால், மாணவ-மாணவிகள் வக்குப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை. பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.
இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி "ஆம் ஆத்மி 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை நிறுத்தியது, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் கொள்ளைடியக்க தனியார் பள்ளிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது" என்றார்.