நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை - விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
- நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.
தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.
இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.
அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.