கேரளாவில் ரஷிய பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்- ஜெயிலில் அடைப்பு
- ரஷ்ய பெண் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆகிலை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கூராச்சுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆகில் (வயது 26).
இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் ரஷ்யாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பெண் முகமது ஆகில் அழைப்பின் பேரில் கேரளா வந்துள்ளார்.
அதன்பிறகு 2 பேரும் கத்தார், நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கோழிக்கோடு திரும்பினர். கூராச்சுண்டுவில் உள்ள முகமது ஆகில் வீட்டில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் ரஷ்ய பெண் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற விசாரணையில், முகமது ஆகிலுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் முகமது ஆகில், கஞ்சா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தாக்கியதாகவும் ரஷ்ய பெண் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆகிலை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கொயிலாண்டி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.