இந்தியா

தாய் அடைக்கபட்ட ஜெயில் கதவை தட்டி சிறுமி அழுத காட்சி.

திருட்டு வழக்கில் கைதான தாயை பார்க்க வேண்டுமென ஜெயில் கதவை தட்டி கதறி அழுத 7 வயது சிறுமி

Published On 2023-12-18 04:06 GMT   |   Update On 2023-12-18 04:06 GMT
  • சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் புறநகர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

இளம் பெண்ணை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கர்னூல் ஊரக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலில் அடைத்தனர்.

தாயை போலீசார் எதற்காக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் என சிறுமிக்கு தெரியவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் உன்னுடைய தாய் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலுக்கு சிறுமி சென்றார். அப்போது ஜெயிலின் கதவு மூடப்பட்டு இருந்தது.

தனது தாயை காண வேண்டும் என கூறி ஜெயில் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார். ஜெயில் கதவு திறக்காததால் கதறி அழுதபடி மீண்டும் மீண்டும் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயில் அதிகாரிகள் கதவைத் திறந்து சிறுமியை ஜெயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு தனது தாயை கண்ட சிறுமி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அப்போது சிறுமி தனது தாயிடம் போலீசார் உன்னை ஏன் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள் என கேட்ட சம்பவம் அங்குள்ளவர்களின் நெஞ்சை உருக செய்தது.

சிறிது நேர சந்திப்பிற்கு பிறகு சிறுமியின் உறவினர்கள் ஜெயிலுக்கு வந்தனர்.

ஜெயில் அதிகாரிகள் சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News