இந்தியா

ஒடிசா காட்டுக்குள் இரவு முழுவதும் தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்த 5 வயது சிறுவன்

Published On 2025-12-30 08:10 IST   |   Update On 2025-12-30 08:10:00 IST
  • விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.

அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.

ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.

Tags:    

Similar News